Step into an infinite world of stories
கண்ணாடி முன் நின்று முகத்தைச் சீர் செய்து கொண்டிருந்த வசுந்தராவுக்கு உள்ளேயிருந்து உத்தர விட்டுக் கொண்டிருந்த தாயின் குரல், எரிச்சலூட்டியது. ‘எப்படியாவது, இன்று வருகிறவனையாவது, விட்டு விடாமல் பிடித்துக் கொள்’ என்று, கீறல் விழுந்த ரிக்கார்டு மாதிரி சொல்லிக் கொண்டே இருந்தால், என்ன அர்த்தம்? அவள் என்ன, வருகிறவனின் கையைப் பற்றியா, பிடித்து வைக்க முடியும்? அல்லது, ஒவ்வொருவனாக வந்து, நன்றாக மூக்குப் பிடிக்க முழுங்கிவிட்டு, அவளைத் தட்டிக் கழித்து விட்டுச் செல்வதில்தான், அவளுக்குச் சந்தோஷமா? அன்றி, இப்படி அடிக்கடி யார் முன்னேயாவது காட்சிப் பொருளாக நிற்பதில்தான், மகிழ்ச்சியா? சொல்லப் போனால், முதலிலிருந்தே அவளுக்கு அதில் மிகவும் வெறுப்புதானே? அருவறுப்பும் தானே? அவளும், உயிரோடு உணர்ச்சியும் உள்ள, கூடவே சிந்திக்கவும் தெரிந்த ஒரு மனிதப் பிறவியாயிற்றே என்கிற எண்ணமே இல்லாமல், அவளது மூக்கு, முழி, நிறம் பற்றி விலாவாரியாகப் பேசி, அதற்கு மேல் நகை, தொகை பேரம் நடத்துவதைக் கேட்க, அவளுக்கும் தான் எப்படி இருக்குமாம்? ஒருதரம் வந்தவர்களில், ஓர் அம்மாள், வசுவின் தலைமுடியை இழுத்துக் கூடப் பார்த்தாள். ஒட்டு முடியா என்று பரிசோதித்தாளாம். அதிர்ச்சியும் ஆத்திரமுமாக வசுந்தரா தலையை இழுத்துக் கொண்டு முறைக்க, ‘சந்தையிலே மாடு பிடிக்கும்போதுகூடப் பல்லைப் பிடித்துப் பாராமல் ஓட்டி வருவது இல்லை, வீட்டுக்கு மருமகளைச் சும்மா இழுத்துக் கொண்டு போக முடியுமா?’ என்று கேட்டாள், அந்தப் பெண்மணி. இழுப்பதாமே?மாடும் நானும் ஒன்றா?’ என்று கேட்கத் துடித்த நாவை, உறுத்து நோக்கி, உதட்டின் மீது கை வைத்துக் காட்டிய தாயின் சைகை அடக்க, வசுந்தரா வாயை மூடிக் கொண்டு பேசாதிருந்தாள். ‘இழுத்துக் கொண்டு போவது’ என்று சொன்னதற்காக, அம்மாவுக்கே, அந்த அம்மாள் மேல் ஆத்திரம் வந்திருக்க வேண்டும். அதைவிட்டு, மகளான அவளை அடக்குகிறார்களே என்று, உள்ளூரப் பொறுமிய போதும், தாயின் கோபத்துக்கு அஞ்சி, வசுந்தரா, தலையைக் குனிந்து, தரையைப் பார்த்தபடி சும்மா உட்கார்ந்திருந்தாள். ஆயினும், அவள் முறைத்துப் பார்த்ததே, பெரும் குற்றமாகி, இந்தத் திமிர் பிடித்த பெண் வேண்டாம் என்று, அந்தப் பிள்ளை வீட்டார் சென்றுவிட, வசுவுக்கு அவள் தாயிடமிருந்து நல்ல திட்டு கிடைத்தது. பெண் என்றால் ஐம்புலன்களையும் அடக்க வேண்டுமாம், எரிச்சலைக் காட்டக் கூடாது, முகத்தைச் சுளிக்க கூடாது, நினைப்பதைப் பேசக் கூடாது, நிமிர்ந்து நோக்கக் கூடாது. ஆனால், இந்த மாதிரி அறிவுரைகள் எல்லாம், அடுத்த பெண் விஷயத்தில் மட்டும், அம்மாவுக்கு நினைவிருப்பதே இல்லையே? செல்லப் பெண் என்ன செய்தாலும் அது தான் சரியென்று, தோன்றி விடுகிறதே. அப்போதுதான், வசுந்தராவுக்கு மிகவும் மனதுக்குக் கஷ்டமாகிவிடும். மூத்த மகள் செய்யும் போது, தப்பு என்று சொல்லித் திட்டுகிறவள், அதையே இளைய மகள் செய்தால், ஒரு புன்னகையோடு கண்டு கொள்ளாமல் போய்விடுவாள். ஒருவேளை, அவளும், சௌந்தர்யாவைப் போல, அம்மாவைக் கொண்டு அதே அழகுடன், எலுமிச்சம்பழ நிறத்தில் பிறந்திருந்தால், அவளுக்கும் அம்மாவின் ‘செல்லம்’ கிடைத்திருக்கக் கூடும். ஆனால், வசு, அவள் அப்பாவின் வாரிசாக அல்லவா பிறந்து தொலைத்திருக்கிறாள். அதுதான், அம்மாவைப் பொறுத்தவரையில், வசுந்தரா செய்த பெரும் தவறாக ஆகிவிட்டது. ஆனாலும், இது ரொம்பவும் அநியாயமாகத்தான், வசுந்தராவுக்குப் பட்டது
© 2025 PublishDrive (Ebook): 6610000860012
Release date
Ebook: 23 May 2025
English
India