Step into an infinite world of stories
முன்னுரை
- இசை விமர்சகர் திரு. சுப்புடு
விமர்சன வேலை மிகவும் தொல்லைகள் நிறைந்தது. ஒரு கச்சேரியையோ, புத்தகத்தையோ “நன்றாக இருக்கிறது” என்று எழுதினால் “ஹும்! அவருக்கு வேண்டியவர் போல இருக்கிறது!” என்பார்கள். “நன்றாக இல்லை!” என்று எழுதிவிட்டாலோ, “ஹும்! இவனுக்கு என்ன தெரியும்? பிராக்ஞன் என்று எண்ணம்!” என்று உதட்டைப் பிதுக்குவார்கள். (இவருக்கு என்ற மரியாதைப் பதத்தை இச்சமயங்களில் உபயோகிக்க மாட்டார்கள்!)
ஆக எப்படி எழுதினாலும், விமர்சகனுக்கு ஒன்றும் தெரியாது என்றுதான் முடிவு கட்டுகிறார்கள்.
எனவே எஸ். லட்சுமி சுப்பிரமணியத்தின் “நாதமெனும் கோயிலிலே...” நாவலைப் பற்றி என்ன எழுதுவது என்று தவிக்கிறேன். அதே சமயம் என்னை முன்னுரை எழுதும்படி கேட்டுக் கொண்டதன் காரணமும் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன். (இப்படி விழிப்பது எனக்குத் திண்ணைப் பள்ளிக்கூட நாட்களிலிருந்தே பழக்கம்.)
இரண்டு இசைக் கலைஞர்களைப் பற்றிய நாவலானதால் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
அல்லது,
எங்களிருவருக்கும் அமைந்த பெயர்ப் பொருத்தம் காரணமாக இருக்கலாம்.
இக்கதை தொடர்ந்து வெளி வந்த போது, நான் ஆர்வத்துடன் படித்து வந்தேன். ஏனெனில் இதில் மருந்துக்குக்கூட, தமிழில் “பச்சை” - ஆங்கிலத்தில் “நீலம்” என்பது இல்லை. செயற்கை அம்சம் இல்லாத சுருதி சுத்தமான படைப்பு, ஏகப்பட்ட கதாபாத்திரங்களைத் திணித்துக் கடாபுடா பண்ணவில்லை. எல்லாமே மாசு மறுவற்ற (ஸ்டெயின்லெஸ்) பாத்திரங்கள் தாம். நீங்களும் நானும், வீட்டில், தெருவில், வாழ்க்கையில், சந்திக்கும் நபர்களைக் கதையில் பார்க்கும் போது நமக்கு ஈடுபாடு அதிகமாகிறது.
“கதையோ, நாகரீகமோ நமது புறச்சூழ் நிலைக்கு - அப்பாற்பட்ட ஒரு யதார்த்த நிலையில் உள்ள ‘சர் - ரியலிஸ்டிக்’ வழியில், ஆழமான மன நெருடல்களை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்துவதுடன், மனக்கிலேசங்களை உருவமைக்கும் சாத்தியக் கூறுகளை ஒருமுனைப் யாட்டுடன் ஆராய வழி வகுக்க வேண்டும்.”
இது என்ன அபஸ்வரம் என்கிறீர்களா?
(நமக்குள் ஒரு சின்ன இரகசியம். மேலே கூறியுள்ள வாக்கியத்துக்கு எனக்கும் பொருள் தெரியாது. நீங்களும் தெரிந்து கொள்ள முயல வேண்டாம்!) இப்படி எழுதினால் தான் இலக்கிய விமரிசனம் என்று சிலர் ஒத்துக் கொள்வார்கள். அவர்களுக்காக இப்படி எழுதியுள்ளேன். கதையை விமர்சிக்கப் போவதில்லை. படிப்பவர்களுக்கு ‘சஸ்பென்ஸ்’ போய்விடும்.
இன்னும் கூட முன்னுரையை நீளமாக எழுத ஆசை தான். ஆனால் நாவலை விட முன்னரை “பிரமாதம்” என்று சொல்லிவிடப் போகிறீர்களே என்ற அச்சத்தாலும், தன்னடக்கத்தாலும் இவ்வளவோடு நிறுத்திக் கொள்கிறேன்.
நட்புக்குரிய லட்சுமி சுப்பிரமணியம் மேலும் பல நாவல்களை எழுதி நம்மை மகிழ்விப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால் மறுபடியும் என்னை முன்னுரை எழுதும்படி கேட்பார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை! அதற்கு அஸ்திவாரம் போட்டுவிட்டேன்...
நாதமெனும் கோயிலிலே
நல்லதொரு நாவலாம்
கீதத்தின் இரகசியமும்
நாதத்தின் ஒலிவடிவும்
போதைதரும் பொருட்சுவையும்
ஆதாரமாய் அமைந்த
சாதனை இது வாகும்
சத்தியம் - சத்தியமே!
Release date
Ebook: 23 December 2019
English
India
